மதுரை: விஜய் கட்சியுடன் தேர்தலில் தேமுதிக கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்பது பற்றி ஜனவரியில் பொதுச் செயலாளர் அறிவிப்பார் என, அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜயபிரபாகரன் மதுரையில் தெரிவித்தார்.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பழங்காநத்தம் பகுதிச் செயலாளர் லட்சுமணன் இல்ல விழாவில் தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் பங்கேற்றார்.
இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ‘ இல்லம் தேடி, உள்ளம் நாடி’ என்ற இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் செய்கிறோம். தேமுதிக எந்தக் கட்சி கூட்டணிக்கு செல்கிறதோ அக்கட்சிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். தற்போது, தேமுதிக மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்.
விஜய் கட்சியுடன் தேர்தல் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்பதை வரும் ஜனவரி 9-ம் தேதி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்கும் மாநாட்டில் பொதுச் செயலாளரே அறிவிப்பார். விஜயகாந்துக்கும் , விஜய்க்கும் ஒரு நல்ல நட்பு உள்ளது.
நாம் தமிழர் கட்சி சீமான் அன்றைய தினம் கேப்டன் ட்ரெண்டிங்கில் இருந்தபோது, கேப்டனை திட்டியதால் ஓட்டு வாங்கினார். அரசியலில் நிரந்தர நண்பனும் , எதிரியும் இல்லை. விஜயகாந்த் ரசிகர்கள், தொண்டர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல.அண்ணன் விஜய்யை எங்களுக்கும் பிடிக்கும். அவரது திரைப்பட நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு நான் சென்றிருக்கிறேன்.
மதுரை எனக்கு புதுசு அல்ல. கேப்டன் கரம் பிடித்து வீதி வீதியாக வலம் வந்துள்ளேன். மதுரையின் சிறப்பு என்றால் சப்பாடு தான். இங்குள்ள சிறப்பான உணவுகளை எனக்கு என் அப்பா வாங்கிக் கொடுத்துள்ளார். பல எதிர்ப்புகளை மீறி தேமுதிக கட்சி வந்துள்ளது அதற்கு கேப்டன் விஜயகாந்த் தான் காரணம். எனது அப்பாவை நான் மிஸ் பண்ணுவது போல தமிழகத்தில் ஒவ்வொருவரும் மிஸ் பண்ணுகின்றனர்.
கேப்டன் மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்தார். உங்கள் ஆசையை பூர்த்தி செய்ய லேடி கேப்டன் வந்துள்ளார். அவர் தான் எனது அம்மா. பிரேமலதா விஜயகாந்த் அடுத்த ஜெயலலிதாவா என கேட்கின்றனர். எங்கள் அப்பா தமிழ், தமிழ் என, வாழ்ந்தார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் யாரும் கூட்டம் கூட்டலாம். ஆனால் மக்கள் தெளிவானவர்கள். யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்று மக்களுக்கு தெரியும். எனது அப்பா லட்சியம் ஜெயிக்கவே என் குடும்பம் எல்லாத்தையும் விட்டுவிட்டு உங்கள் முன் நிற்கிறேன். எனது அப்பா, தாத்தா கட்சியில் இல்லை. சுயமாக சம்பாதித்து உழைத்து கட்சியை வளர்த்துள்ளோம். இவ்வாறு விஜயபிரபாகரன் பேசினார்.