சென்னை: “விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாதபோது கட்சி கொஞ்சம் தொய்வு நிலையில் இருந்தது உண்மைதான். ஆனால் இன்றைக்கு வேகமாகவும், உற்சாகத்துடனும் நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி வரும் 2026-ம் ஆண்டு தேமுதிகவின் மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் விழா சென்னையில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும் விஜயகாந்தின் சமாதி அலங்கரிக்கப்பட்டு, பொதுமக்களும், தொண்டர்களும் வழிபட ஏதுவாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் மற்றும் சகோதரர் எல்.கே.சுதிஷ் ஆகியோ ருடன் விஜயகாந்தின் சமாதிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். அதைத்தொடர்ந்து ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். கட்சிக் கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கிய பிரேமலதா, பின்னர் பிறந்த நாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, 10 ஆயிரம் பேருக்கான அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியது: “முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இரண்டாம் கட்ட பயணத்தை விரைவில் அறிவிப்போம். ஜன.9-ம் தேதி தேமுதிக சார்பில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு – 2.0’ கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக கூட்டணி தொடர்பாக தெளிவான முடிவு எடுக்கப்படும். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது மாநாட்டில் அறிவிப்போம்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 தேர்தல் மிக மிக முக்கியமானது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது. இதை யொட்டி பூத் கமிட்டி அமைப்பது, கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை, உறுப்பினர் சேர்க்கை என தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக் கிறோம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாதபோது கட்சி கொஞ்சம் தொய்வு நிலையில் இருந்தது உண்மை தான். ஆனால் இன்றைக்கு வேகமாகவும், உற்சாகத்துடனும் நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி வரும் 2026ம் ஆண்டு தேமுதிகவின் மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும்” என்று அவர் கூறினார்.