மதுரை: தேனி வனப் பகுதியில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். மதுரை மாவட்டம் விராதனூரில் ‘மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை’ என்ற பெயரில் ஆடு-மாடுகள் மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில் சீமான் பேசியதாவது: ஆடு, மாடுகள் எங்களின் செல்வங்கள். எங்கள் வாழ்க்கை, கலாச்சாரத்துடன் இணைந்து வாழும் உயிரினங்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் உறவினர்போல ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறோம். காடும், காடு சார்ந்த இடங்களில் வாழ்ந்த ஆடு, மாடுகள், தற்போது அதே காட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை உடைக்க வேண்டும்.
மாட்டுக்கறி வர்த்தகம் ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. பால் வர்த்தகம் மூலம் ரூ.13.5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் தமிழகத்தின் பங்கு ரூ.1.38 லட்சம் கோடியாகும். இந்த பால் சந்தை மதிப்பை கூட்டுவதற்கு பதில், ரூ.50 ஆயிரம் கோடிக்கு மது அருந்தவைத்து, தாய்மார்களை கண்கலங்கச் செய்கின்றனர்.
இந்தியாவில் ரூ.1.7 கோடி ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் இருப்பதாகவும், தமிழகத்தில் 12 லட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த மேய்ச்சல் நிலங்களை விமான நிலையம், பேருந்து நிலையம் கட்டுவதற்காக அபகரிக்கின்றனர். கால்நடைகளை காட்டுக்குள் மேய விடுவதில்லை, சமவெளியிலும் மேய விடுவதில்லை.
மாடுகள் மேய்ந்தால் காட்டில் ஆறு, அருவி உருவாகாது என்கின்றனர். நொய்யல் ஆறு, வைகை ஆறு நிலை எப்படி இருக்கிறது. இந்த ஆறுகள் சாக்கடைகளாக மாறியுள்ளன. 32 ஆறுகள் மண் அள்ளப்பட்டு, சீரழிக்கப்பட்டுள்ளன. வன விலங்குகளைப் பாதுகாக்க மேய்ச்சலுக்கு தடை விதிப்பதாக கூறுபவர்கள், குவாரிக்காக மலைகளை அழிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் காட்டுக்குள் மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற விவசாயி சன்னாசி வனத் துறையால் தாக்கப்பட்டார். அதே இடத்தில் ஆக. 3-ம் தேதி பல்லாயிரம் மாடுகளை காட்டுக்குள் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் நடத்துவோம். இவ்வாறு சீமான் பேசினார்.