சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கள ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டறிய தமிழகம் வந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவுடன் தவெக தலைவர் விஜய் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முழுமையாக கள ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிய தமிழகம் வந்துள்ள பாஜக எம்.பி. ஹேம மாலினி தலைமையிலான எட்டு பேர் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழுவை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் சந்தித்துப் பேச வேண்டும். நீதி கிடைப்பதற்கு துணை நிற்க வேண்டும்.
இந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம், மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது. இதேபோல, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் விரிவான அறிக்கையை கேட்டுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேற்று சம்பவம் நடைபெற்ற கரூர், வேலுசாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களின் உண்மை அறியும் குழு, இன்று கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்ய வருகிறது. 41 பேர் பலியான சம்பவம் குறித்த உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும், சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு, காயமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இக்குழு முழுமையான விசாரணை மேற்கொள்ள உள்ளது.
இந்தச் சம்பவத்தில் அரசியல் சதி உள்ளதா? மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் நிர்வாக சீர்கேடுகள்தான் இதற்குக் காரணமா? தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாடுகளில் குறையுள்ளதா? என்பன உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் இக்குழு ஆய்வு செய்து உண்மை விவரங்களை சேகரிக்க உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்தும், கரூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தும் இக்குழு தகவல்களை சேகரிக்க உள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து இக்குழு ஆறுதல் தெரிவிக்க உள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை பாஜக தலைமைக்கு தாக்கல் செய்ய உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், இந்த சம்பவத்தில் சதி உள்ளதாக கூறி இருக்கும் தமிழக வெற்றிக் கழக குற்றச்சாட்டின் உண்மை தன்மை குறித்தும், முழுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மத்திய அரசுக்கு பாஜக பரிந்துரை செய்யும்.
எனவே, உண்மை கண்டறியும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை விஜய் சந்திக்க வேண்டும். சம்பவத்தின்போது, என்ன நடந்தது என்பது குறித்து உண்மை நிலவரங்களை விஜய் விளக்க வேண்டும். ஏனெனில், நடந்த விஷயங்களை நேரில் நின்று பார்த்தவர், முதல் சாட்சியாக அறியப்படுபவர் விஜய். தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவினர் மக்களிடம் விசாரணை நடத்தினாலும், காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டாலும் நடிகர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் அளிக்கக்கூடிய தகவல்கள் உண்மைகளை தெளிவாக எடுத்து கூறுபவையாக இருக்கும் என்பதால் அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் எம்பிக்கள் குழுவைச் சந்தித்து தன்னுடைய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.
உண்மை அறியும் எம்பிக்கள் குழுவுடன் இணைந்து கரூர் சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை வெளிக்கொணர முழு முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு ஏஎன்எஸ் பிரசாத் தெரிவித்துள்ளார்.