சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவர்களின் பயோமெட்ரிக்கில் வருகை பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்று டீன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அங்கீகாரத்துக்கு அனுமதி அளிக்கப்படாது.
, நடப்பாண்டு தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் குழு மேற்கொண்ட ஆய்வில், சென்னை மருத்துவக் கல்லூரி தவிர்த்து மற்ற 35 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகை பதிவு, அதிலும் ஒரு முறை மட்டும் வருகை பதிவு, இணை பேராசிரியர், பேராசிரியர் பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதன்பேரில் கல்லூரிகளின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நேற்று சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுமைக்கும் 400-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி வருகிறது. ஏற்கெனவே அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 35 மருத்துவ கல்லூரிகளில் சில பற்றாக்குறைகளுக்கான விளக்கத்தினை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 26 கல்லூரிகள் உரிய பதிலை தக்க விளக்கங்களுடன் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளன. மூன்று கல்லூரிகள் இன்றைக்கு (நேற்று) தங்கள் பதிலை அனுப்ப உள்ளன. மீதமுள்ள கல்லூரிகள் வரும் 16-ம் தேதிக்குள் உரிய விளக்கத்தினை அனுப்ப உரிய வழிகாட்டுதலை மருத்துவ கல்வி இயக்ககம் வழங்கியுள்ளது.
பொதுவான மேற்கோள் கட்டப்பட்ட குறைபாடுகளான பயோமெட்ரிக் வருகை பதிவு குறைவு, உரிய ஆசிரிய பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதாகும். மருத்துவர்கள் தங்கள் பயோமெட்ரிக் வருகை மற்றும் செல்கை பதிவை கட்டாயமாக்குமாறு கல்லூரி டீன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறை என்று சொல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னாள் 2,246 மருத்துவர்கள் காலிப்பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.
மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 415 காலிப்பணியிடங்கள் இருந்தன. இவை தற்போது நிரப்பப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்கள் காலிப்பணியிடம் என்பது இல்லை. இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அளவிலான காலி பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.