நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் தலைமை நிர்வாகி பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப் படு்வதாக சு.வெங்கடேசன் எம்.பி. ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைவர்களில் எத்தனை பேர் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் என்ற கேள்வியை மக்களவையில் நிதியமைச்சரிடம் எழுப்பியதற்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தமுள்ள 9 தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்களில் ஒருவர்கூட இந்தப் பிரிவினர் இல்லை.
மொத்தமுள்ள 98 இயக்குநர்களில் பட்டியல் வகுப்பினர் 6 பேர், பழங்குடியினர், சிறுபான்மையினர் தலா ஒருவர், பெண்கள் 12 பேர். அதேபோன்று எல்.ஐ.சியின் இயக்குநரவையில் மொத்தமுள்ள 13 பேரில் ஒருவர் பழங்குடியினர், ஒரு பெண், இதில் தலைவர் பொறுப்பில் உள்ளவரும் மேற்கண்ட பிரிவினைச் சேர்ந்தவர் இல்லை.
பொது காப்பீட்டு நிறுவனங்களின் இயக்குநரவையில் மொத்தமுள்ள 48 பேரில் பட்டியல் வகுப்பினர் 5 பேர், பெண்கள் 18 பேர். இதில், தலைமை நிர்வாகிகள் 6 பேரில் பட்டியல் வகுப்பினர் ஒருவர், பெண்கள் 3 பேர் என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த பதில் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. சாதி பாகுபாடுகளின் வெளிப்பாடு ஆகும். இட ஒதுக்கீடு இல்லாத பதவிகளில் எந்த அளவுக்கு பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சியாகும். அரசு நிறுவனங்களின் கதியே இப்படியென்றால் தனியார் நிறுவனங்களில் எல்லாம் என்ன நிலைமை இருக்கும்? என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.