கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எழுதியுள்ள ‘தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை’ நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, சிறப்பு பங்கேற்பாளர்கள் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.கோபால கவுடா ஆகியோர் பெற்று கொண்டனர். அதன்பின் முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வேல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எப்போதும் கொள்கையை விட்டுத் தரமாட்டோம். தமிழகத்தின் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதற்கு அடையாளம்தான் இந்த புத்தகம். இந்த புத்தகத்தின் தலைப்பே மொத்த கருத்தையும் சொல்லிவிட்டது. இப்படி ஒரு கல்விக்கொள்கையை மத்திய பாஜக அரசு உருவாக்கியபோதே கல்வியில் சிறந்த தமிழகத்தை நாசப்படுத்திட மாட்டோம் என்று அன்றே கருணாநிதி எதிர்த்தார். கருணாநிதியின் வரிகளையே மகேஸ் புத்தகத்தின் தலைப்பாக மாற்றியுள்ளார் .
கல்வியை காவிமயமாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதுதான் கல்விக் கொள்கை. பாஜகவின் திட்டங்கள், எதிர்கால நோக்கங்கள் எல்லாவற்றையும் பார்த்துதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என திட்டவட்டமாக கூறுகிறோம்.
தேசிய கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டை சிதைத்துவிடும். பன்முக பண்பாட்டை தகர்த்துவிடும். சமஸ்கிருதத்தை கொண்ட ஒற்றை தேசமாக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம். தேசிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் வளரும் என்று சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். எது நடக்கும் என்று நாம் தொடர்ந்து எச்சரித்தோமோ, அதை உள்துறை அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அழிக்கும் முயற்சி இது.
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவருதான் இதை தடுக்க ஒரே வழி. அதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும். இல்லையெனில் கல்வி எல்லாருக்கும் எட்டாக்கனியாக மாறிவிடும். மும்மொழி கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு தரவேண்டிய ரூ.2,150 கோடியை வழங்க மறுக்கிறது. எனவே மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் (கல்வி) திக் விஜய் சிங் பேசுகையில், ‘‘தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. மத்திய கல்வி வாரியத்தால் ஒப்புதலும் அளிக்கப்படவில்லை. மாநில அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்களைகூட யுஜிசி மூலம் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும்போது, சமக்ர சிக்ஷா திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி வழங்க மறுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. கூட்டாட்சி தத்துவத்தை விரும்புவோர் ஒன்றிணைந்து தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்’’ என்று தெரிவித்தார்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, ‘‘மதயானையை அப்படியே விட்டுவிடாமல் அதை சமத்துவ யானையாக மாற்ற ஓர் அங்குசம் தேவை. இந்த புத்தகம் அந்த பணியை செய்ய முயல்கிறது. இந்தியா போன்ற பன்முகத்தன்மையும், பல்வேறு தேசிய இனங்களையும் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் கடந்தகால வரலாறுகளை உள்வாங்கி கூட்டாட்சி தத்துவத்தை அறிந்து மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல் ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அவற்றை எதையுமே செய்யவில்லை என்பது நூலாசிரியரின் வாதம். பெண் கல்வி பற்றி தேசிய கல்விக் கொள்கையில் அதிகம் பேசப்படவில்லை. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டதால் அதை தனியார்மயமாக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது’’ என்று குறிப்பிட்டார்.
முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது வரவேற்புரையில், ‘‘நண்பர் அன்பில் மகேஸ் மிகச் சரியான நேரத்தில், முக்கியமான இந்த புத்தகத்தை அவர் கொண்டு வந்துள்ளார். கல்வியை காவிமயமாக்க துடிக்கும் பாசிஸ்ட்களை நேருக்கு நேர் நின்று எதிர்க்கும் காலக்கட்டத்தில் தற்போது நமது கல்வித்துறை இருக்கிறது. இந்த சவாலான சூழல்களை சாதனைகளாக அவர் மாற்றி வருகிறார். தேசியக் கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் போராடும். அதற்கு சிறந்த ஆயுதமாக இந்த புத்தகம் விளங்கும். இதை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்றார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் தனது ஏற்புரையில், ‘‘ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் 20 நோக்கங்கள் உள்ளன. அதில் 19-ல் தமிழகம் முன்னிலையில் உள்ளது. ஆனால், நமக்கு நிதி வழங்கப்படவில்லை. அதேநேரம் குறைந்த நோக்கங்களை அடைந்த குஜராத், மகராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்கொள்கை மதத்தின் கோட்பாடுகளை கல்வித் துறையில் திணிக்க முயல்வதை ஏற்க முடியாது. இதை பொதுமக்களிடம் சொல்வதற்காக இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன். அதிலுள்ள பாதிப்புகளை விரிவாக கூறியுள்ளேன்’’ என்றார்.