மாநகராட்சி சார்பில், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தெரு நாய்கள் கணக்கெடுப்பில், சுமார் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில், தற்போது புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டு 14,678 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், இதுவரை 9,302 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின்படி, வெறிநாய்க் கடி நோய் பாதிப்பிலிருந்து பொது மக்களை காக்கவும், வெறிநாய்க் கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கவும், அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களுக்கு வெறிநாய்க் கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் முகாம், மணலி மண்டலம், மாத்தூர், எம்எம்டிஏ பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில், மாநகராட்சி மேயர் ஆர். பிரியா பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்தார்.
தலா 10 குழுக்கள் மூலம், ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் தோராயமாக நாளொன்றுக்கு சுமார் 100 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில், 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு நாளொன்றுக்கு தோராயமாக 3 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 60 நாட்களில் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தி முடிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, நிலைக் குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ.சாந்த குமாரி, தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசைன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.