ராமேசுவரம்: தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ரயில் பாதைகளை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தி உள்ளார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி எம்.பி நேரில் வலியுறுத்தி அளித்த கடித விவரம்: தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மானாமதுரையில் இருந்து அபிராமம் பார்த்திபனூர் கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த புதிய ரயில் பாதை வழியாக ரயில்கள் இயக்கப்பட்டால் தென் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள், வணிக ரீதியாகவும் பயனுள்ளதாக அமையும் இந்த ரயில் பாதையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் முதல் தூத்துக்குடி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக ரயில்வே திட்டத்தை மீண்டும் துவங்கி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே அருங்காட்சியகம் அமைப்பது, சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு பகல் நேர விரைவு வண்டிகளை இயக்குவது, தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ரயில்கள் நின்று செல்வது, ராமேசுவரம் – சென்னை ரயில் பெட்டிகளை புதிய பெட்டிக்களாக மாற்றுவது, ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அதிவேச ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தி உள்ளார்.