மதுரை: தென்காசி வல்லத்தில் வீட்டை அபகரிக்க முயன்றதாக ஜான்பாண்டியன் கட்சி நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் கொங்கன்தான் பாறை கிராமத்தைச் சார்ந்த நிவன் மேத்யூ, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் கடந்த 2018ல் தென்காசி மாவட்டம் வல்லம் கிராமத்தில் பூமணி என்பவரின் வீட்டை ரூ.19 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினேன். அந்த வீட்டில் உறவினருடன் வசித்து வருகிறேன்.
தற்போது அந்த வீட்டின் மதிப்பு உயர்ந்துள்ளதால் வீட்டை விற்ற பூமணி மற்றும் காந்தி ஆகியோர் வீட்டை தங்கள் பெயருக்கு எழுதி கொடுக்குமாறு பல்வேறு வழிகளில் மிரட்டல் விடுத்து வருகின்றனர். சிலர் என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அபகரிக்க முயன்று வருகின்றனர்.
நான் வீட்டில் இல்லாத 27.5.2025-ல் காந்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் அவர் கட்சியினருடன் என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களிடம் வீட்டை காலி செய்து ஓடிவிடுமாறும், இல்லாவிட்டால் நடப்பதே வேறு என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
காந்தி மற்றும் அவரது கூலிப்படையினரால் என் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜூன் 14-ல் தென்காசி மாவட்ட எஸ்பி, குற்றாலம் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சியினர் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டில் என்னை தேடியுள்ளனர். பின்னர் தமமுக தென்காசி மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் அவருடன் வந்த மூவர் ஆயுதங்களால் என் வீட்டின் கதவுகளில் போட்டிருந்த பூட்டுக்களை உடைத்துவிட்டு வேறு பூட்டுக்களை போட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்து உரிய ஆதாரங்களுடன் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என் வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு தரப்பில் மனுதாரர் புகார் தொடர்பாக கணேசன், தமிழ்செல்வன், ராஜா, சௌந்தர கண்ணன் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் போலீஸார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.