சென்னை: சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி நிர்வாகமும். தமிழக அரசும் இன்று பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின், 5-வது மற்றும் 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்கான ரூ. 276 கோடிக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து, தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்து, தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், அதன் தலைவரான வழக்கறிஞர் கு.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் இந்த இரு மண்டலங்களிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவு பணியாளர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவர். சுமார் 2 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், அதை மீறி தற்போது தனியாருக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே. சுரேந்தர் முன்பாக நேற்று விசாரணைக்குவந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றார்.
அப்போது மனுதாரர் தரப்பில், “சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக இரவும், பகலுமாக கொட்டும் மழையிலும் 10 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
குப்பையை அள்ளி சுத்தம் செய்த அவர்களை மாநகராட்சி நிர்வாகம் குப்பையைப் போல வீசி எறி்ந்துள்ளது. அவர்களின் பணிபாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என, வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவி்ட்டு, விசாரணையை இன்றைக்கு (12-ம் தேதி) தள்ளி வைத்தார்.
வழக்கறிஞர் முறையீடு…! – இதற்கிடையே, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், வழக்கறிஞர் வினோத் என்பவர் ஆஜராகி, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் முன்அறிவிப்பு இல்லாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், குப்பைகள் அள்ளப் படாமல் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த போராட்டம் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என, முறையீடு செய்தார். இதையடுத்து, நீதிபதிகள் இதுதொடர்பாக மனுதாக்கல் செய்தால் இன்று விசாரிக்கப்படும் என, தெரிவித்துள்ளனர்.
கட்சித் தலைவர்கள் ஆதரவு: பணி நிரந்தரம் கோரி 11-வது நாளாக ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தவெக தலைவர் விஜய் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கான தனது ஆதரவையும் தெரிவித்தார்.