சென்னை: போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்காக ரூ.276 கோடிக்கான ஒப்பந்தத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பாக கடந்த 13 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பாக சட்டவிரோதமாக நடைபாதை மற்றும் சாலையைமறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த கோரி தேன்மொழி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நடந்த வாதம்: மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி: தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்தால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்: சட்டவிரோத போராட்டத்தை கைவிட்டு நடைபாதையை காலி செய்ய வேண்டும் என போலீஸார் தரப்பில் கடந்த ஆக.7 அன்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த துப்புரவு தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பாகத்தான் போராட்டம் நடத்த முடியும். இதை சட்டவிரோதம் என்று கூற முடியாது.
இந்த பிரச்சினை தொடர்பாக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்த உரிமை உண்டு என்றாலும், போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலைகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறாக போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எனவே, உரிய அனுமதியின்றி நடைபாதையில் போராட்டம் நடத்தி வரும் அவர்களை போலீஸார் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதேநேரம் முறைப்படி போராட்டம் நடத்த அனுமதி கோரினால் அதற்கு சட்டப்படி பரிசீலித்து போலீஸார் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர்.
வாழ்வாதாரம் பாதுகாக்க கோரி.. இந்த நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்து, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவரான வழக்கறிஞர் கு.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி கே.சுரேந்தர் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடந்த வாதம்:
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.குமாரசுவாமி: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும், இதுவரை பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை எதிர்த்தும் சென்னை தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைத்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் தற்போது ரூ.750 ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.500 மட்டும்தான் கிடைக்கும். பாதி பேருக்கு வேலை கிடைக்காது. அதனால்தான் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: தூய்மைப் பணியாளர்கள் யாரும் வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். அவர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலமாக பணி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணி ஏற்கெனவே தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது 5, 6-வது மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒப்பந்த நிறுவனம் ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் பணிப் பாதுகாப்பு வழங்கப்படும்.
தனியார் ஒப்பந்த நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்: தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் விதிமீறல்கள் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். மொத்தம் 1,900 தொழிலாளர்கள் தேவை என்ற நிலையில் பணியில் சேருவதற்கான தேதி ஆக.31 வரை நீட்டிக்கப்படும். இவ்வாறு வாதம் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.சுரேந்தர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.