சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த காணொலியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், “தூய்மைப் பணியாளர்கள் மாண்பை திமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்று கூறியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தியதும், அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதும் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்தப் போராட்டம் பற்றியோ, அவர்களின் கோரிக்கைகள் பற்றியோ எதுவுமே குறிப்பிடாமல், “தூய்மைப் பணியாளர்கள் மாண்பை திமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்று முதல்வர் கூறியுள்ளது விவாதப் பொருளாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில், “நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. 4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத் திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,
- தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு
- தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
- தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி
- தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
- தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
- பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி
* தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத் திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம். இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக முதல் தவெக வரை: மாநகராட்சி மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். அதேபோல், திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் தூய்மை பணியாளர்களில் 10 வருடத்துக்கும் மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யபடும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் முதலான கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
புதன்கிழமை நள்ளிரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களோடு, அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 800-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்துக்கு அதிமுக, மார்க்சிஸ்ட், தேமுதிக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. ஆனால், முதல்வர் அதுபற்றி எதுவும் பேசாமல் கடந்து சென்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.