மதுரை: தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையை வைத்து திமுக கூட்டணியை உடைக்க நினைப்பது அற்பமான அரசியல் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று மதுரையில் தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணாநகரில் இன்று விசிக நிர்வாகி இல்ல விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விசிக தொடக்கத்திலிருந்து குரல் கொடுத்து வருகிறோம். மத்திய, மாநில அரசு துறைகளில் தனியார் மயம் தீவிரமடைந்து வருகிறது.
அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் அப்புறப்படுத்தியதாக காவல் துறையும் அமைச்சரும் தெரிவித்தனர். தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். அதனை தனியார் மயமாக்கக் கூடாது என தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம். கைது செய்ததை கண்டித்ததோடு, அவர்கள் மீதான வழக்கையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினோம்.
இதை வைத்து அரசியல் செய்வது அர்த்தமற்ற அணுகுமுறை. தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட இப்பிரச்சினையை வைத்து திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். iஇது அற்பமான அரசியல். தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் தலித்துகளாக இருப்பதால் அப்பிரச்சினையைப் பற்றி திருமாவளவன் தான் பேச வேண்டும் என்ற பார்வையும் ஏற்புடையதல்ல.
இது எல்லோருக்கமான பிரச்சினை. அதிமுக ஏன் இப்பிரச்சினையை கையிலெடுத்து போராடவில்லை. போராடிய 13 நாள் எதுவும் செய்யாமல், கடைசி நாள் கைது செய்த போது தான் பழனிசாமி வாய் திறந்தார். சென்னையில் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் மயப்படுத்த அரசாணை பிறப்பித்ததே அதிமுக தான். அந்த அரசாணையைத் தான் தற்போது செயல்படுத்துகின்றனர்.
போராடுபவர்கள் யாரும் அரசாணை பிறப்பித்த அதிமுக பற்றி பேசவில்லை. இதனை திமுகவுக்கு வக்காலத்து வாங்குவதற்காக சொல்லவில்லை. திமுக செய்தால் எதிர்க்க வேண்டும், அதிமுக செய்தால் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான் இங்குள்ள அரசியல் அணுகுமுறையாக இருக்கிறது. தவெக தலைவர் விஜய் புதிய அணுகு முறையை கையாளுகிறார். அதற்கு காலம் தான் பதில் சொல்லும். அவர் மக்களைத் தேடிச் செல்லும் காலம் வரும்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையில் தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் என்று அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜிஎஸ்டி வரி முறையையே கைவிட வேண்டும், பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பிஹார் தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு என்றாலும் கூட அது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதால் வரவேற்கிறோம். அதேவேளையில், பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ் புகழ்ந்து பேசியிருப்பது ஏற்புடையதல்ல. அவர் ஆர்எஸ்எஸ் தயாரிப்பு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.” என்றார்.
பின்னர் கோ.புதூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திருமாவளவன் எம்.பி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு கிரேன் மூலம் 15 அடி உயர மலர் மாலை அணிவிக்கப்பட்டது.