மதுரை: தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் அரசின் மவுனமும், காவல் துறையினரைக் கொண்டு போராட்டத்தை நசுக்குவதும் மிகப் பெரிய மனித உரிமை மீறல் என சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதர நான்கு மண்டலங்களில் மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் மாதம் ரூ.22,950 ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.
தனியார்வசம் தூய்மைப் பணிகளை ஒப்படைத்துள்ளதால் மாதம் ரூ.16,950 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை, சம்பள உயர்வு மற்றும் தங்கள் நலத்திட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் பில்டிங்கில் அமைதியான முறையில் போராடி வந்தனர்.
போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களிடம் அரசு முறையான பேச்சு வார்த்தை நடத்தி நல்ல முடிவுக்கு கொண்டு வராமல், நீதிமன்ற உத்தரவினை காண்பித்து காவல் துறையினர் மூலம் போராட்டத்தை நசுக்கி இருப்பது அராஜக நடவடிக்கை ஆகும். இதனை சமம் குடிமக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. நியாயமான போராட்டம் நடத்திய பணியாளர்களின் பிரச்சினையை சரி செய்யாமல், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, தூய்மைப் பணியாளர்களின் குரலை காவல் துறையினரைக் கொண்டு அடக்கியிருப்பது மிகப் பெரிய ஜனநாயக விரோத செயலாகும். இது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும்.
தமிழக அரசானது சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ள செயலானது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனியார்மயத்திற்கு எதிராக, தங்களுடைய உரிமைகளுக்காக போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்ததோடு அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த பல சமூக செயல்பாட்டாளர்களை எல்லாம் கைது செய்துள்ளது காவல் துறை. கைது செய்யப்பட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.
இனிமேலாவது அரசு உடனடியாக தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தனது தனியார்மய கொள்கையையினை கைவிடவேண்டும். தூய்மைப் பணிகளை முழுமையாக மாநகராட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து பணியாளர்களை நிரந்தர பணியாளராக அமர்த்த வேண்டும். அதுதான் அரசின் நியாயமான செயலாக இருக்க முடியும். தமிழக முதல்வர் நேரடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, போராட்ட உரிமைக்கு மதிப்புக் கொடுத்து முறையான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.