சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகப் போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை கைவிட முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீஸார் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையி்ல் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரிக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின்போது அவர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
தவறான முன்னுதாரணம்: இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தூய்மைப் பணியாளர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ஏன் கைவிடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிட முடியாது. தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களின் செயலால் அரசு சொத்துகள் மட்டுமின்றி போலீஸாரும், தனிநபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகளை கைவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் ஏற்கெனவே
விடுவிக்கப்பட்டுவிட்டதால் இந்த ஆட்கொணர்வு மனுவும் காலாவதியாகி விட்டது” என்றார். அதற்கு நீதிபதிகள், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டுமா? என்றும், இந்த விவகாரத்தில் மறப்போம், மன்னிப்போம் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கலாமே, போலீஸார் மீதும் குற்றச்சாட்டு உள்ளதே, என்றனர்.
தூண்டுதலின்பேரில் போராட்டம்: அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாகத்தான் தமிழக அரசு செயல்படுகிறது. மாநகராட்சியில் 11 வார்டுகள் ஏற்கெனவே தனியார் மயமாக்கப்பட்ட நிலையில், தற்போதைய போராட்டம் உள்நோக்கம் கொண்டது. தூய்மைப் பணியாளர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். போலீஸார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீதும் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம், என்றார்.
அப்போது மனுதாரர்கள்தரப்பில், 2 பெண் வழக்கறிஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாக கூறப்பட்டதால் அவர்களை அழைத்து நீதிபதிகள் விசாரித்தனர். பின்னர் பெண் வழக்கறிஞர்களிடம் காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்துள்ளனர். எனவே இதுதொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரிக்கலாம், என கருத்து தெரிவித்தனர். ஆட்கொணர்வு வழக்கில் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது எனக்கூறி அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும், எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.