சென்னை: தூண் தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கும் சுயசான்று அடிப்படையில் ஒற்றை சாளர முறையில் உடனடி ஒப்புதல் பெறும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து நகர மற்றும் ஊரமைப்பு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், தமிழகத்தில் முதல்முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் ஆகியோர் இணையதளம் வாயிலாக சுயசான்றிதழ் அடிப்படையில் பயன் பெறும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவுக்குள் கட்டப்படும் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் வரையுள்ள குடியிருப்பு கட்டுமானத்துக்கு உடனடியாக ஒற்றைச்சாளர முறையில் கட்டிட அனுமதிகளைப் பெறும் ஒரு ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தார். தற்போது இத்திட்டத்தின் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டமானது மக்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இத்திட்டத்தை மேலும் பயனுள்ளதாக்க 2025–26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, வாகன நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) கொண்ட 10 மீட்டர் வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் பதிவுசெய்து உடனடியாக கட்டிட அனுமதி பெறுவதற்கு கூடுதல் வசதி இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.