திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையில் இயங்கி வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளி மே 8-ம் தேதி தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது. இப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். உண்டு, உறைவிட பள்ளியான இதில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த வேலூர் மாவட்டம் கொடியநத்தம் வசந்தநகர் எம்.குப்பம் பகுதியைச் சேர்ந்த பலராமன் மகன் யுவராஜ்(17) என்பவர் நேற்று காலை விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த துவாக்குடி போலீஸார், அங்கு சென்று யுவராஜ் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் அரசு மாதிரி பள்ளி விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த பள்ளியில் ஜூன் 11-ம் தேதி பிளஸ் 2 படித்து வந்த மாணவி பிரித்திகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த சோகத்திலிருந்து அப்பள்ளி மாணவர்கள் மீளாதநிலையில், பிளஸ் 2 மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடலை வாங்க மறுப்பு: மாணவரின் பெற்றோர் பலராமன்- ரேகா, அண்ணன் நவீன் உள்ளிட்ட குடும்பத்தினர் நேற்று இரவு மாதிரிப் பள்ளியை முற்றுகையிட்டனர். பாமக தெற்கு மாவட்டச் செயலாளர் திலீப்குமார் உள்ளிட்ட கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, ‘ பள்ளி தலைமையாசிரியர், வார்டன் மீது எப்ஐஆர் பதிவுச் செய்து கைது செய்யவேண்டும்.
மாணவரின் உடலை நீதிபதியின் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்’ என்றனர். அவர்களிடம் காவல் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இரவு 9 மணி அளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
அமைச்சர் பதிலளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில், பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம், இதே பள்ளியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலினால் இந்தப் பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு அடுத்தடுத்து இரண்டு பிளஸ் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது, பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, இதுகுறித்து முழு விசாரணை நடத்தி, மேலும் இதுபோன்ற துயர நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்த விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும், மாணவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்க, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிப்பது குறித்தும் பதிலளிக்க வேண்டியது அமைச்சர் அன்பில் மகேஸின் கடமை.