சென்னை: நாட்டின் எல்லைப் பகுதியில் போரிடும் துணை ராணுவப் படையினருக்கு, ராணுவத்தினருக்கு இணையான சலுகைகளை வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை முன்னாள் மத்திய ஆயுத காவல்படை மறுவாழ்வு சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வுச் சங்க முதன்மைச் செயலாளர் எஸ்.மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தது. அத்துடன், மத்திய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கை மூலம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை தாக்கி அழித்தது.
மேலும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ராணுவத்துக்கு துணை நிற்போம் எனக்கூறி, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்தினார். எல்லையில் ராணுவத்துக்கு உதவியாக எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, சாஸ்த்ரா சீமாபால் ஆகிய துணை ராணுவப் படையினர் தங்கள் உயிரை கொடுத்து எல்லையில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்தினருடன் சேர்ந்து சண்டையிட்டு எதிரிகளின் ஏவுதளத்தை அழித்து, தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுத்து அழித்த துணை ராணுவத்தினருக்கு, ராணுவத்தினரை போன்ற அங்கீகாரம் அளிக்க வேண்டும்.மத்திய உள்துறை அமைச்சகம் 2012- ல் மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான உரிமைகளை துணை ராணுவப் படை வீரர்களுக்கும் அளிக்கலாம் என தெரிவித்தது.
எனவே, இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சீருடைப் பணியாளர் தேர்வில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டில், கோவா, ஹரியானா மாநிலங்களை போல துணை ராணுவப் படையினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல், மத்திய அரசு துணை ராணுவப் படையில் சேரும் வீரர்களுக்கு, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க வேண்டும், என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.