வேலூர்: துணை முதல்வர் பதவியில் இருப்பதா, இல்லையா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும், எடப்பாடி பழனிசாமி இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தேன்பள்ளி கிராமத்தில் இன்று (ஜூலை 25) நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தலைமை தாங்கினார். இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்வில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ”ஒரே தொகுதியில் எப்படி இத்தனை முறை வெல்ல முடிகிறது என பலர் என்னை கேட்கும்போது, நீங்கள் தொகுதியை, தொகுதியாக பார்க்கிறீர்கள் நான் கோயிலாக பார்க்கிறேன். அதே சமயம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்: திமுக 523 வாக்குறுதிகளை கொடுத்ததில் எத்தனை நிறைவேற்றியுள்ளது என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளதாக கூறியுள்ளீர்கள். அவர்களது ஆட்சியில் எத்தனை வாக்குறுதி கொடுத்தார்கள், அதில் எத்தனை நிறைவேற்றினார்கள் என்ற கணக்கையும் சேர்த்து பார்ப்போம்.” என்றார்.
தொடர்ந்து, திமுகவில் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு துணை முதல்வர் கொடுக்காமல் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தது தான் திமுகவின் நான்கு ஆண்டு சாதனை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அந்த பதவியில் நான் இருப்பதா, இல்லையா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி இல்லை” என்றார்.