புதுச்சேரி: துணைநிலை ஆளுநருடன் எந்த மோதலும் இல்லை என்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் பனிப்போர் நிலவி வருவதாக காங்கிரஸ், அதிமுக கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருடன் எந்த பிரச்சினையும் இல்லை. மாநில அந்தஸ்து கேட்டு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமானது. அரசின் வேகமான செயல்பாட்டுக்கு மாநில அந்தஸ்து கேட்கிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இது எனக்காக கேட்பதில்லை. வரும் கால தேவை என்பதால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசிடம் திட்டங்களை கேட்டு பெறுகிறோம். அமைச்சர்கள் இதற்காக டெல்லி சென்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என கூறுகிறார்களே என கேட்டபோது, “கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி எப்படி நடந்தது என எல்லோருக்கும் தெரியும். யாருடைய ஆட்சியில் எந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்பதையும் மக்கள் அறிவார்கள்” என்று முதல்வர் கூறினார்.