சென்னை: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட இந்திய அரசுக்கு பாராட்டுகள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த தாக்குதல் சம்பவம், போர்நிறுத்தம் ஒப்பந்தத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்திய எல்லைப்பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய ராணுவத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். கேரளாவுக்கு படப்பிடிப்புக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவத்தினர் துவம்சம் செய்துள்ளனர்.
அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த போரை திறமையாக, வலிமையாக, வீரியத்துடன் கையாண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.
இந்தியர்கள் ஒருமித்த கருத்து: இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசும், பிரதமரும் இந்திய நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்கும் விதமாக செயல்பட்டதற்கும், இந்தியாவுக்கு வெற்றியாக அமைந்திருப்பதற்கும் நன்றி.
இந்திய அரசும், பிரதமரும் பாகிஸ்தானுடைய தீவிரவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடவடிக்கைகளில் ஈடுபட்டது பாராட்டத்தக்கது. இந்தியர்கள் மத்திய அரசுக்கு ஒருமித்த கருத்தோடு துணை நிற்பது கூடுதல் பலம்.
குறிப்பாக, பாகிஸ்தானுடைய தாக்குதலுக்கு எதிர்வினையாக என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக பிரதமர் தலைமையிலான மத்திய அரசின் ராஜதந்திரமான முடிவுகளும், நமது முப்படைகளின் தேசப்பற்றும் இந்தியாவின் பக்கம் தர்மத்தையும், வெற்றியையும் கொடுத்திருக்கிறது. எனவே, 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பையும் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்திய அரசுக்கு நன்றி. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.