சென்னை: ‘வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தால் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினரின் பின்புலத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர், எதையும் சிரித்துக்கொண்டே கடந்துவிட வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக, கர்ப்பிணியான ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகார் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜைக் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களி்ல் பதிவிட, பேட்டியளிக்க தடை விதிக்கக் கோரியும், ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை அகற்றக் கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், “மாதம்பட்டி ரங்கராஜுக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவுக்கு இந்த உண்மைகள் அனைத்தும் தெரியும்.
தெரிந்துதான் ரங்கராஜுடன் அவர் பழகி வந்துள்ளார். இப்போது தொழில் ரீதியாக பிரச்சினை ஏற்பட்டதும் ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாகக்கூறி 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து அவதூறு பரப்பி வருகிறார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜின் தனிமனித ஆளுமை உரிமைகள் பாதிக்கப்பட்டு, நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
பதிலுக்கு ஜாய் கிரிசில்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், இந்த வழக்கில் தனக்காக நியாயம் கேட்டு ஜாய் கிரிசில்டா சட்டப்போராட்டம் நடத்தி வருவதாகவும், இதில் பதில்மனு தாக்கல் செய்வதாகவும் கூறினார். அப்போது நீதிபதி, “ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தால் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
இஷ்டம்போல எதிர்மறையான விஷயங்களையும், பழைய சம்பவங்களையும் தேடிப்பிடித்து கலர்சாயம் பூசி சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். எதையும் கண்டு கொள்ளாமல் சிரித்துக்கொண்டே கடக்க வேண்டும். சமூகத்தில் யார் மீதும் குற்றம் சாட்டுவது இயல்பாகி விட்டது” என ஆதங்கம் தெரிவித்தார். பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான வழக்கில் எதிர்மனுதாரர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.22-க்கு தள்ளிவைத்துள்ளார்.
அப்போது நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர்களான ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், எஸ்.பிரபாகரன் மற்றும் வழக்கறிஞரும், காங்கிரஸ் எம்.பி.யுமானசுதா ஆகியோர், உங்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என நீதிபதிக்கு ஆதரவு தெரிவித்தனர். நீதிபதி என்.செந்தில்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.