சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து அக்.17-ம் தேதி சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், பாண்டியன், பொதிகை, நெல்லை உள்பட தென் மாவட்டத்துக்கான முக்கிய ரயில்களில் மூன்றரை நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ம் தேதி (திங்கள்கிழமை ) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 60 நாட்களுக்கு முன்பாக, முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்தவகையில், பண்டிகைக்கு 4 நாட்கள் முன்பாக டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில், அக்.17-ம் தேதி அன்று சென்னையில் இருந்து விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது. குறிப்பாக, முக்கிய ரயில்களில் மூன்றரை நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் வந்தது. காலை 8.15 மணிக்குள் பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.
சென்னையில் இருந்து மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு முறையே புறப்படும் பாண்டியன், பொதிகை , நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி ஆகிய விரைவு ரயில்களின் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில், டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது. மேலும், காத்திருப்போர் பட்டியலும் முடிந்து, “ரெக்ரெட்” என்று வந்தது.
இதுபோல, சென்னையில் இருந்து தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு புறப்படும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் இதை நிலைதான். இந்த ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளுக்கு டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது. சில மணி நேரத்தில் “ரெக்ரெட்” நிலைக்கு வந்துவிட்டது. முக்கிய ரயில்களில் ஏசி வகுப்பு டிக்கெட் பதிவு நடைபெற்று முடிந்தன.
தீபாவளி பண்டிகைக்கு சனி, ஞாயிறு விடுமுறையுடன் ஊருக்கு செல்லும் நோக்கில், ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்களில், டிக்கெட் எடுக்க காத்திருந்த மக்கள் சில நிமிடங்களில் டிக்கெட் முடிந்ததால், ஏமாற்றம் அடைந்தனர்.