சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு, ஆணையர் கஜலக்ஷ்மி, போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள், காவல்துறை, சிஎம்டிஏ, நெடுஞ்சாலை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படும்.
பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னை திரும்ப வசதியாக 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை, தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்பு பேருந்துகளும், மற்ற பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 பேருந்துகள் என மொத்தம் 15,129 பேருந்துகளும் இயக்கப்படும். சென்னையில் உள்ள 3 பேருந்து நிலையங்களில் இருந்தும் இந்த பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு செய்ய வசதியாக கிளாம்பாக்கத்தில் 10, கோயம்பேட்டில் 2 என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் செயல்படும். மேலும் டிஎன்எஸ்டிசி செயலி மற்றும் www.tnstc.in இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பேருந்துகளின் இயக்கம் மற்றும் புகார் தெரிவிக்க 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.