சென்னை: திருவண்ணாமலை மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோத கட்டுமானங்களை கண்டறிந்து அகற்ற, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் மீண்டும் இன்று (ஜூன் 6) விசாரணைக்கு வந்தது. எந்த அனுமதியும் பெறாமல் 1,535 கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள 1,535 சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதேபோல், திருவண்ணாமலையில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த வழக்கும், தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நில நிர்வாக ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையில், நீர் நிலைகள் என மனுதாரர் குறிப்பிட்டுள்ள 170 இடங்களில் 84 மட்டுமே நீர் நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வகைப்படுத்தப்பட்டுள்ள 84 நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என கண்டறியவும், ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.