சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் தி.நகர், தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் ரூ.164.92 கோடியில் இரும்பினால் கட்டப்பட்ட ஜெ.அன்பழகன் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில் உயரிய தொழில்நுட்பத்துடன் தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 3,800 டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டு ரூ.164.92 கோடி செலவில் முதல் இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
சிஐடி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மூலம், தெற்கு உஸ்மான் சாலை – பர்கிட் சாலை – மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை – தென்மேற்கு போக் சாலை – நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய மேம்பாலம், 1,200 மீட்டர் நீளம் மற்றும் 8.40 மீட்டர் அகலத்தில் 53 இரும்பு தூண்களுடன் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கி.மீ. நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் தினசரி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
இந்தப் பாலத்துக்கு தி.நகர் தொகுதியின் மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பெயரைச் சூட்டி, பாலத்தை திறந்துவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, ஆ.ராசா எம்.பி. எம்எல்ஏ.க்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, தாயகம் கவி, துணை மேயர் மகேஷ்குமார், துறையின் செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், சென்னை மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜானகிராமன், தி.நகர் கிழக்கு பகுதி திமுக மாவட்ட பிரதிநிதி ஜெ.சீனிவாசன், தி.நகர் மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.