திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயம் மற்றும் மூளை நரம்பியல் பிரிவுகளில் தலா ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றுவதால், நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முன்னாள் முதல்வர் கருணாநிதி 2010-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி தொடங்கிவைத்தார். 500 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் தற்போது, 850 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் மற்றும் மூளை நரம்பியல் பிரிவில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன. ஆனால், இதய நோய்க்கு அறுவை சிகிச்சை மருத்துவர் இல்லை. ஒரு இதய மருத்துவ சிகிச்சை நிபுணர் மட்டுமே உள்ளார். மூளை நரம்பியலில் அறுவை சிகிச்சை மருத்துவர் உள்ளார். சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லை. சிறுநீரக நோய் பிரிவில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் தலா ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளனர்.
இதனால், இதயம் மற்றும் மூளை நரம்பியல் பிரிவில் முழுமையான சிகிச்சை நோயாளிகளுக்கு கிடைக்காததால், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் நிலை உள்ளது. குறிப்பாக, இதய நோய்க்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில், பணியில் உள்ள மருத்துவர்களை கொண்டு நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தஞ்சாவூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதனால், ஏற்படும் காலதாமதத்தால் பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
எனவே, இந்த பிரிவுகளில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைகளில் வாரம் ஒருமுறை இதய நோய், மூளை நரம்பியல், சிறுநீரகப் பிரிவு மருத்துவர்களை அனுப்பிவைத்து மருத்துவ ஆலோசனைகள், மாத்திரைகள் கிடைக்க செய்ய வேண்டும் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்டச் செயலாளர் வரதராஜன் கூறியதாவது: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் உயர் சிறப்பு மருத்துவத்துக்கான(சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவம்) முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்கப்படவில்லை.
இதனால், மூளை நரம்பியல் மற்றும் சிறுநீரகம் தொடர்பாக சிகிச்சை அளிக்க தலா ஒரு மருத்துவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனைத்து உயர் சிறப்பு மருத்துவத்துக்கான முதுநிலை படிப்புகளையும் தொடங்க வேண்டும்.
அவ்வாறு தொடங்கினால், பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள், முதுநிலை மாணவர்கள் என கூடுதல் மருத்துவர்கள் கிடைப்பார்கள். முதல்வர் ஸ்டாலின் இன்று திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கூடுதல் மருத்துவர் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என நம்புகிறோம். இல்லாவிட்டாலும், இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.