திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 4 ரயில் பாதைகளிலும் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனால், ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து, 50 டேங்கர்களில் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொண்டு நேற்று முன் தினம் அதிகாலை சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 18 டேங்கர்கள் எரிந்து நாசமாயின.
இதனால், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே ரயில்களின் சேவை நேற்று முன் தினம் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து, சேதமடைந்த ரயில் பாதைகள் மற்றும் மேல்நிலை மின் கம்பங்கள், மின் கம்பிகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணி தொடங்கியது.
4-வது ரயில் பாதையில் சீரமைப்பு பணி முடிவுக்கு வந்து, நேற்று முன் தினம் இரவு விரைவு ரயில் சேவை தொடங்கியது. 3-வது ரயில் பாதையில் சீரமைப்பு பணி நேற்று காலை நிறைவு பெற்று, காலை 7 மணி முதல் புறநகர் மின்சார ரயில்கள் சேவை தொடங்கியது.
விரைவு ரயில் பாதைகளான 1 மற்றும் 2-வது ரயில் பாதைகளில் இருந்த, தீக்கிரையான டேங்கர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அப்பாதைகள் மற்றும் மேல்நிலை மின்கம்பங்கள், மின் கம்பிகள் சீரமைக்கும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்றது. இதில், விரைவு ரயில் பாதைகள் இரண்டிலும் தலா சுமார் அரை கி.மீ., தூரத்துக்கு தண்டவாளங்கள் கடுமையாக சேதமடைந்ததால், அத்தண்டவாளங்களை மாற்றும் பணி மற்றும் புதிய மின் கம்பங்கள், மின் கம்பிகளை மாற்றும் பணியில், 4 ஜேசிபி இயந்திரங்கள், 2 கிரேன்கள் சகிதம் ரயில்வே ஊழியர்கள் சுமார் 400 பேர் ஈடுபட்டனர்.
இப்பணியில், நேற்று மாலை 4.45 மணியளவில் 3-வது ரயில் பாதை சீரமைப்பு பணி நிறைவு பெற்றது. 4-வது ரயில் பாதை சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இடை இடையே மழை பெய்ததால், அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால், இன்று அதிகாலை 2.55 மணியளவில் 4-வது ரயில் பாதை சீரமைப்பு பணி நிறைவு பெற்றது. ஆகவே, 46 மணி நேரம் நடைபெற்ற ரயில் பாதைகள் சீரமைப்பு பணிக்குப் பிறகு, திருவள்ளூர்- அரக்கோணம் இடையே 4 வழித்தடங்களிலும் மின்சாரம் மற்றும் விரைவு ரயில், சரக்கு ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.