தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து திருவள்ளூர் எம்.பி. சசி காந்த் செந்தில் 2-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் நேற்று முன்தினம் காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்நிலையில் இரவு முழுவதும் தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டார். தொடர்ந்து 2-வது நாளான நேற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் வன்னியரசு. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, வசந்தம் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்க தலைவர் கதிரவன், இந்திய மாணவர் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில தலைவர் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
தொலைபேசி வாயிலாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைத்து பேசினார். மேலும் இந்த போராட்டம் மிகவும் நியாயமான ஒன்று, இருப்பினும் உண்ணவிரதத்தை கைவிட்டு வேறு ஒரு போராட்ட முறையை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விசிக தலைவர் திருமாவளவன், மயிலாடுதுறை எம். பி.சுதா அழைத்து பேசினர்.
போராட்டத்தின்போது சசிகாந்த் செந்தில் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளதால் 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
நியாயமாக தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை கொடுக்காமல் புதிய கல்விக் கொள்கையையும், அதன் மூலம்மும் மொழி கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வைக்க பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை உடனடி யாக வழங்க வலியுறுத்தி கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சசிகாந்த் செந்திலுக்கு நேற்று இரவு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.