சென்னை: திருவள்ளூரில் கூடுதல் ரயில்களை நிறுத்தக் கோரி, தெற்கு ரயில்வேக்கு 150-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. 1,000 மின்னஞ்சல்களை அனுப்ப இலக்கு வைத்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் முக்கிய ரயில் நிலையமாக, திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் 60-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் செல்கின்றன. இருப்பினும், நிறுத்தம் இல்லாததால், பயணிகள் விரைவு ரயில்களின் சேவையைப் பெற முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து, கூடுதல் விரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணிகள், தெற்கு ரயில்வேக்கு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோர் தலைமை அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர்.
இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக செல்லும் 60 ரயில்களில், மங்களூர் மெயில், காவேரி, திருப்பதி, மும்பை, ஏலகிரி, மைசூர் உட்பட 11 விரைவு ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன.
இது போதுமானதாக இல்லை. கோவை, பெங்களூரு, காச்சிக்குடா, நீலகிரி, திருவனந்தபுரம் உட்பட 9 விரைவு ரயில்கள் நின்று செல்ல அனுமதிக்கக் கோரி தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பி வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் பொதுநல சங்கங்கள், பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்ப இருக்கிறோம்.
1,000 மின்னஞ்சல்களை அனுப்ப இலக்கு வைத்து உள்ளோம். மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, திருவள்ளூரில் கூடுதல் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறும்போது, “இந்த கோரிக்கையை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”என்றனர்.