சென்னை: திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “திருவண்ணாமலை மாநகரில் அறநிலையத் துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகளின் அலட்சியத்தாலும், ஆமைவேகப் பணிகளினாலும் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திண்டாடுகின்றனர்.
பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முறையான வழிமுறைகளைக் கையாளாததால் அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பலமணி நேரம் காத்துக்கிடக்கும் அவலம் நிலவுகிறது. குறைந்தது 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யவில்லை.
பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. ஆமை வேகத்தில் மாட வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாட வீதிக்கு வாகனங்கள் வரத் தடை இருக்கின்ற காரணத்தால் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மோசமான சாலைகள், சாலைகளில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களில் எந்தஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அதை மாநகராட்சியுடன் இணைத்து ஏழை, எளிய மக்களிடமிருந்து கூடுதல் வரிகளை மட்டுமே வசூலிக்கின்றனர்.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத அறநிலையத் துறையைக் கண்டித்தும், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், ஆமை வேகத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் அரசுத் துறையினரைக் கண்டித்தும், இவற்றை வேடிக்கை பார்க்கும் திமுக அரசை கண்டித்தும் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வரும் 16-ம் தேதி காலை 10 மணிக்கு, திருவண்ணாமலை மாநகராட்சி, அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.