ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவில் திருமணம் ஆகாதவர்களுக்கு அனுமதியில்லை என்ற காவல் துறையினரின் எச்சரிக்கை பேனரால் பொது மக்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
ஓசூரில் 152 ஏக்கரில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் 4 ஏக்கர் பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்கப் பட்டுள்ளது. இப்பூங்காவில் பொதுமக்கள் நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏரிக்கரையையொட்டி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், இப்பூங்காவுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் பலரும் வந்து பூங்காவில் பொழுதை கழித்துச் செல்கின்றனர். இப்பூங்காவில் பகல் நேரங்களில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் வந்து செல்வதுடன் சிலர் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்நிலையில், பூங்காவில் காதல் ஜோடிகள் வருகை அதிகரித்திருப்பதோடு, பூங்காவின் உள்ளே முகம் சுழிக்கும் அளவுக்கு காதல் ஜோடிகள் அத்துமீறும் செயல்களும், சிலர் மது அருந்தும் இடமாகவும் மாற்றி வருகின்றனர். இரவு காவலாளி இல்லாததால், இரவில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பூங்காவை காலை மற்றும் மாலை நேரம் மட்டும் மாநகராட்சி நிர்வாகம் திறந்து வருகிறது.
இதனிடையே, பூங்கா நுழைவாயில் பகுதியில் காவல் துறை சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘திருமணம் ஆகாதவர்கள் உள்ளே அனுமதியில்லை’ என வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. காதலர்களை எச்சரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்ட பேனரில் இடம்பெற்ற வாசகம் திருமணம் ஆகாதவர்கள் உள்ளே அனுமதியில்லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “ராமநாயக்கன் ஏரி பூங்காவில் காதலர்கள் அத்துமீறல் காரணமாக பூங்கா நுழைவாயிலில், காவல் துறை வைத்துள்ள பதாகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவில் காவலாளிகளைப் பணியமர்த்தி காதலர்களைக் கண்காணிக்க வும், அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். அதை விடுத்துப் பொத்தம் பொதுவாகப் பதாகை வைத்திருப்பது வேதனை அளிக்கிறது” என்றனர்.