சென்னை: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் மிக முக்கியமான பொருளாதார உயிர்நாடிகளில் ஒன்று திருப்பூர் பின்னலாடை மையம் என்பது உங்களுக்குத் தெரியும். இது தமிழகத்தின் மக்கள் மட்டுமல்ல, பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பிற மாநிலங்களிலிருந்து வரும் குறிப்பிடத்தக்க தொழிலாளர்களையும் உள்ளடக்கிய 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் கிட்டத்தட்ட 60 சதவீதம் பங்களிக்கிறது. இதன் மூலம் நாட்டுக்கு கணிசமான அந்நியச் செலாவணியை உருவாக்குகிறது. இருப்பினும், பருத்தி நூல் விலையில் நிலையற்ற தன்மை மற்றும் அதிக உற்பத்தி செலவு காரணமாக இந்தத் தொழில் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.
அமெரிக்கா சமீபத்தில் 25 சதவீத வரியை விதித்தது, அதைத் தொடர்ந்து 50 சதவீதமாக அதிகரித்திருப்பது, நமது ஏற்றுமதியாளர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு கடுமையான அடியை ஏற்படுத்தியுள்ளது. இது பெரும்பாலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்கெனவே நலிவடைந்து இருந்தது. அமெரிக்காவின் வரி விதிப்பு, இதை மேலும் மோசமாக்கியுள்ளது.
அமெரிக்காவுக்கு அப்பால் ஏற்றுமதி இடங்களை பன்முகப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்கான அவசரத் தேவைகளை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன்.
இந்தச் சூழலில், கடுமையான கட்டண உயர்வால் ஏற்படும் திடீர் போட்டித்தன்மை இழப்பை ஈடுசெய்ய இழப்பீடுகள் அல்லது ஏற்றுமதி ஊக்கத்தொகைகள் வடிவில் நிதி நிவாரணம் வழங்கு வேண்டும். உற்பத்திச் செலவைக் குறைக்க பருத்தி நூலின் வரி விகிதங்களில் நிவாரணம் அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்திய பின்னலாடை சர்வதேச சந்தைகளில் போட்டியாக இருக்க உதவும்.
குறு, சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியைக் குறைக்க, நிலுவைத் தொகையை குறைந்தது 6 மாதங்களுக்கு ஒத்திவைத்து, நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டி மீதான நிவாரணத்துடன் கடன் திருப்பிச் செலுத்துதலை மறுசீரமைக்க வங்கிகளுக்கு உத்தரவுகளை வழங்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.