திருப்பூர்: திருப்பூரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகை வீடுகளில் அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 வீடுகள் தரைமட்டமாகின.
திருப்பூர் கல்லூரி சாலை சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள எம்ஜிஆர் காலனியில் தாராதேவி (50) என்பவருக்குச் சொந்தமான இடத்தில், 42 தகரக் கொட்டகைகள் அமைத்து, தொழிலாளர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர்கள் இங்கு தங்கி, திருப்பூரில் கட்டிட வேலை மற்றும் பனியன் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அனைவரும் பணிக்கு சென்ற நிலையில், மதியம் வேலையில் ஒரு வீட்டில் காஸ் கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்தது. அந்த வீட்டில் பற்றிய தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியதால், 9 வீடுகளில் சிலிண்டர்கள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 42 தகர கொட்டகை வீடுகளும் தூக்கி எறியப்பட்டு தரைமட்டமாகின.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, 30 தீயணைப்பு வீரர்கள், சுமார் 3 மணி நேரம் போராடி 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் வீட்டிலிருந்த உடைகள், மளிகைப் பொருட்கள், ஆதார் அட்டைகள், கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் சேர்த்து வைத்திருந்த பணம், தங்க நகைகள், 3 இருசக்கர வாகனங்கள், கட்டில், பீரோ என அனைத்துப் பொருட்களும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. இதனால் அங்கு வசித்து வந்த தொழிலாளர்கள் கதறி அழுதனர்.
மிகவும் குறுகலான சிறிய இடத்தில் தகர கொட்டகையில் வீடுகள் அமைத்து, ரூ.1,500 வாடகை வசூலித்து வந்ததும், கழிப்பறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இல்லாமல் வீடுகள் அமைக்கப்பட்டிருப் பதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பகல் நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து வருவாய் மற்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.