மதுரை: திருப்பூரில் விசாரணைக்கு சென்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதை இந்து மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”திருப்பூர் மடத்துக்குளம் பகுதியில் விசாரணைக்காக சென்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகவேல் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கொலைக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையிலும், ரவுடிகளுக்கு பாடம் புகட்டும் வகையிலும் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியான மணிகண்டன் போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார்.
இது நீதிக்கான வெற்றியும், காவல்துறையின் தைரியத்திற்கான சான்றும் ஆகும். இந்த நடவடிக்கையை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. சட்ட- ஒழுங்கை காக்க தங்களது உயிரை நீத்த காவல்துறையினரின் தியாகத்தை மரியாதையுடன் நினைவுக்கூர வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ரவுடிகளுக்கு பாடமாக அமையும்.
சட்ட ஒழுங்கையும், சட்ட ரீதியான சமூகத்தையும் பாதுகாக்கும். காவல்துறையினரின் உயிரை வாங்கிய கொடூரத் தாக்குதலுக்கு இதுபோன்று திடமான பதிலடி அளிப்பது, அனைத்து பொது மக்களுக்கும் பாதுகாப்பு உணர்வையும், அரசின் தைரியத்தையும் உணர்த்துகிறது” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.