திருப்பூர்: திருப்பூரில் ரயிலில் இருந்து இறங்கும் போது ரயிலுக்கும், நடைமேடைக்குமான இடைவெளியில் பெண் ஒருவர் விழுந்த நிலையில், அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் துரிதமாக செயல்பட்டு பெண்ணை பத்திரமாக மீட்டார். திருப்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை மன்னார் குடியில் இருந்து கோவை செல்லும் ரயில் வந்தது.
அந்த ரயில் திருப்பூர் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் நின்று புறப்பட்டபோது, திருப்பூரை சேர்ந்த சுசீலா (58), தனது 10 வயது பேத்தியுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்கினார். ரயில் வேகமாக புறப்பட்டதால், அவர் நிலை தடுமாறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே இருக்கும் இடைவெளி பகுதிக்குள் விழுந்தார்.
சிறுமி நடைமேடையில் இறங்கிவிடவே, இதை பார்த்து அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர் திவ்யா, ஓடிச்சென்று அந்த பெண் பயணியை எந்த அசைவும் இல்லாமல் படுக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அவரிடம் பேசிக் கொண்டே, தலையை தூக்காமல் இருக்கும்படியும், உடலை அசைக்காமல் இருக்கவும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், ரயில் பயணி ஒருவர் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். உடனடியாக அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் திவ்யா, பெண் பயணியை வெளியே தூக்கினார். துரிதமாக செயல்பட்டு பெண் பயணியை காப்பாற்றிய திவ்யாவின் செயலை போலீஸார், ரயில் பயணிகள் என பலரும் பாராட்டினர்.பெண் பயணியை மீட்ட காவலர் திவ்யா.பத்திரமாக மீட்கப்பட்ட பெண் பயணி சுசீலா தனது பேத்தியுடன்.