சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,426.89 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 19,785 பயனாளிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (11.08.2025) திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.949 கோடியே 53 லட்சம் செலவில் 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.182 கோடியே 06 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.295 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்:
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருப்பூர் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் 798 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடை பணிகள்; திருப்பூர் கோவில்வழி பகுதியில் 34 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம்; மூலனூர் பேரூராட்சி, அண்ணாநகரில் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொது சேவை மையக் கட்டடங்கள், உணவு தானியக் கிடங்குகள், ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள், நியாய விலைக் கட்டடங்கள், நூலகக் கட்டடங்கள், உணவு சேமிப்புக் கிடங்கு, அங்கன்வாடிக் கட்டடங்கள், வட்டார சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 10 கோடியே 90 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவிலான முடிவுற்றப் பணிகள்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், பல்லடம் சேமிப்புக்கிடங்கில் 2 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதலாக 3,400 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு; நீர்வளத் துறை சார்பில், காங்கயம் வட்டம், வீரணம்பாளையம், காட்டுநாயக்கன்பாளையம் அருகில் வட்டமலைகரை ஓடையில் 3 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை; மகளிர் திட்டம் சார்பில், தளி பேரூராட்சி, திருமூர்த்தி மலை பஞ்சலிங்கஅருவி செல்லும் வழியில் 10 இலட்சம் ரூபாய் செலவில் 1 தற்காலிக மதி அங்காடி.
தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் 39 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா; வனத்துறை சார்பில், சின்னார், மனுப்பட்டி, காங்கயம் ஆகிய இடங்களில் 20 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் வனச்சோதனை சாவடிகளில் முன் கள பெண் வன ஊழியர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், அமராவதி வனச்சரகத்தில் 11 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் வனக்காவலர் குடியிருப்புகள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் செலவில் தாய் சேய் நலப் பிரிவுக் கட்டடம், வேலம்பாளையத்தில் 48 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் புதிய அரசு மருத்துவமனை, 50 லட்சம் ரூபாய் செலவில் குன்னத்தூர் வட்டார பொது சுகாதார அலகு, பள்ளபாளையம், அங்கேரிபாளையம், ஈ.ஆர்.பி.நகர் ஆகிய இடங்களில் 90 லட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையக் கட்டடங்கள்.
பால்வளத் துறை சார்பில், தளவாய்ப்பட்டணம் மற்றும் தண்ணீர் பந்தல் பாளையம் ஆகிய இடங்களில் 65 லட்சம் ரூபாய் செலவில் தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்கள்; என மொத்தம், ரூ.949 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் 61 முடிவுற்றப் பணிகளை முதல்வர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம், கன்னிவாடி பேரூராட்சியில் 5 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் ஆதாயங்களை மேம்படுத்துதல், குன்னத்தூர் பேரூராட்சியில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், ருத்ராவதி பேரூராட்சியில் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள்.
திருப்பூர் மாநகராட்சியில் 58 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயிரி எரிவாயு கலன்கள் மற்றும் 46 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரதான அலுவலகக் கட்டடம்; பேரறிஞர் அண்ணா மத்திய பேருந்து நிலையம் மற்றும் கூடுதல் பேருந்து நிலையங்களில் 2 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள், அண்ணாநகர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் 1 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அமராவதி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு புதுப்பையில் 13 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், அவினாசி, தாராபுரம், குடிமங்கலம், குண்டடம், மடத்துக்குளம், மூலனூர், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய இடங்களில் 19 கோடியே 51 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள், நல்லம்மாள்புரம் மற்றும் மேட்டுப்பாளையத்தில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடங்கள் மற்றும் உணவுக் கூடங்கள் அமைக்கும் பணிகள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் 23 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சைப்பிரிவுக் கட்டடம், ரங்க சமுத்திரம், சுண்டக்கம்பாளையம், சின்னபொம்மன்சாலை, பெருமா நல்லூர், எ.வடுகபாளையம் ஆகிய இடங்களில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை, ஆரம்ப மற்றும் பொது சுகாதார நிலையக் கட்டடங்கள்.
வேளாண்மைத் துறை சார்பில், சாமளாபுரம் – பல்லடத்தில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம்; என மொத்தம், ரூ.182 கோடியே 06 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 35 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
திருப்பூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்: வருவாய்த் துறை சார்பில், 10,157 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 1,191 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள், மகளிர் திட்டத்தின் கீழ், 722 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழு வங்கி கடன்கள் மற்றும் சுழல் நிதி வழங்குதல், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், 55 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம்.
நுண்ணீர் பாசனத்திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 1,212 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், 45 பயனாளிகளுக்கு பயனாளிகளுக்கு தனி நபர் வன உரிமை ஆவணங்கள், 25 பயனாளிகளுக்கு விவசாய வன உரிமை ஆவணங்கள்.
வேளாண்மைத் துறை சார்பில், 600 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 85 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டிகள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், 65 பயனாளிகளுக்கு பரிசல் வழங்குதல், நுண் கடன் வழங்குதல், தொழிலாளர் நலத் துறை சார்பில், 388 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, பணியிடத்து விபத்து மரண உதவித் தொகை, ஓய்வூதியம்,
தாட்கோ சார்பில், 147 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், நரிக்குரவ மக்களுக்கு சங்கங்களின் மூலமாக கடனுதவி, தூய்மைப் பணியாளர்களுக்கு கடனுதவிகள், இயற்கை மரணம், ஈமச் சடங்கு, கல்வி, மகப்பேறு ஆகியவற்றிற்கு உதவித் தொகைகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், 179 பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஆணைகள்.
வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், 75 பயனாளிகளுக்கு பவர் டில்லர், பவர் வீடர், தென்னை மட்டை தூளாக்கும் கருவிகள், ரோட்டோ வேடர், ஆழ்துறை கிணறு மற்றும் பண்ணை குட்டை அமைத்தல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில், 33 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினை திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 3,462 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், 43 பயனாளிகளுக்கு திறன்பேசிகள், பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பேட்டரி வீல் சேர்கள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், கூட்டுறவுத் துறை சார்பில், 1,239 பயனாளிகளுக்கு பயிர்க் கடன், சுய உதவிக் குழு கடன், மத்திய காலக் கடன், வீட்டு அடமானக் கடன், நகை பயிர்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன், தானிய ஈட்டுக் கடன், மாற்றுத் திறனாளி கடன், டாம்கோ கடன், பால்வளத் துறை சார்பில், 62 பயனாளிகளுக்கு மேக கணினி பால் பகுப்பாய்வு கருவிகள், பால் கொள்கலன் குளிர்விப்பான்கள்; என பல்வேறு துறைகளின் சார்பில், 295 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.