சென்னை: இரட்டை வேட முதல்வர் ஆட்சியில் நியாயம் கிடைக்காது என்றும் திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற கோயில் பணியாளர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபுறம் கூறியிருக்கும் நிலையில், இன்னொருபுறம் அவர்களைக் காப்பாற்ற காவல்துறையும், தமிழக அரசும் முயன்று வருகின்றன. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் கொடூரமான முறையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று நம்புவதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அஜித்குமாரின் உடலில் 30 முதல் 40 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், பல இடங்களில் ரத்தம் வழிந்ததற்கான தடயங்கள் இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கழுத்து நெறிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் மருத்துவர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அஜித்குமாரின் முழுமையான உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகும் போது இன்னும் அதிர்ச்சியான செய்திகள் வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஆனால், இவை அனைத்தையும் மூடி மறைக்க காவல்துறை துடிக்கிறது. அஜித்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தான் அவர் உயிரிழந்ததாகவும், காவல்துறையின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி விழுந்ததால் தான் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் காவல்துறை வழக்கமான கதை வசனங்களை எழுதிக் கொண்டிருக்கிறது.
அஜித்குமார் கொலை வழக்கில் நியாயம் வழங்கப்படும் என்று ஒருபுறம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வரும் நிலையில், இன்னொருபுறம் அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இந்த படுகொலையை இயற்கை மரணமாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தாலும் நீதி கிடைக்காது.
எனவே, சாத்தான்குளம் காவல்நிலைய கொலைகள் குறித்த வழக்கு எவ்வாறு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதோ, அதேபோல், திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும். இந்த வழக்கில் காவலர்கள் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடைய உயரதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும். வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர்களுக்கு பிணை வழங்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.