சிவகங்கை: திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்’ நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவைக்கு பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர். இந்த மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உங்களுடன் ‘ஸ்டாலின் திட்ட முகாம்கள்’ நடைபெற்றன. இதில் பல ஆயிரம் பேர் மனுக்கள் கொடுத்தனர்.
இந்நிலையில் நேற்று திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மேலும் அந்த மனுக்களில் பெரும்பாலும் பட்டா மாற்றத்துக்காக வழங்கப்பட்டவை. அங்கு வந்த போலீஸார் மனுக்களை சேகரித்து விசாரிக்கின்றனர். மனுக்களை ஆற்றில் தூக்கி எறிந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆற்றில் மிதந்த மனுக்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டவை. மனுக்கள் எப்படி ஆற்றில் மிதந்தன என்பது குறித்து விசாரிக்கிறோம், என்றனர்.