திருப்புவனம்: திருப்புவனம் அருகே ரூ.40.27 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கானூர் அணைக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் இருந்து செல்லும் கானூர் கால்வாய் மூலம் 6 கண்மாய்கள், பழையனூர் கால்வாய் மூலம் 13 கண்மாய்கள் பயன் பெறுகின்றன. இதன்மூலம் 7,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது ஆறு பள்ளமாக இருப்பதால் கால்வாய்களில் தண்ணீர் செல்லவில்லை. இதையடுத்து 2 கால்வாய்கள் பயன்பெறும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து திருப்புவனம் புதூர் அருகே வைகை ஆற்றில் ரூ.40.27 கோடியில் அணைக்கட்டு கட்டப்பட்டு வருகிறது. இதை நேற்று துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். அப்போது அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தினார். கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், துணை முதல்வரின் தனிச் செயலர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத், எம்.எல்.ஏ. தமிழரசி, பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.