மதுரை: லட்சக்கணக்கான மக்கள் திரண்ட மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் மாநகராட்சி சார்பில் இரவு, பகலாக குப்பைகள் அகற்றும் பணி கடந்த 10-ம் தேதி முதல் 24 மணி நேரமும் நடந்து வருகிறது.
மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான நேற்று நள்ளிரவு வரை முகாமிட்டும், இன்று அதிகாலை 4 மணிக்கு சென்றும் கோயில் பகுதிகளில் சுகாதாரப் பணிகள், குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் சரியாக அதிகாலை 5.31 மணிக்கு நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் பக்தர்கள், தமிழகம் முழுவதும் இருந்து குடும்பத்துடன் வந்ததால், திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் வழக்கத்தை விட 6 மடங்கு குப்பைகள் சேர்ந்தன.
கும்பாபிஷேகம் நடந்த அதிகாலை நேரத்தில் பக்தர்களுக்கு மாநகர காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்ததால், கும்பிஷேகம் முடிந்த பிறகு இன்று காலை முதல் இரவு வரை பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சாரைசாரயாக குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் அபிஷேக் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கடந்த 10-ம் தேதி முதல் திருப்பரங்குன்றம் பகுதியில் முகாமிட்டு 24 மணி நேரமும் தீவிர தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆணையாளர் சித்ரா, கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாளான நேற்று 13-ம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரையும், இன்று கும்பிஷேகம் நடப்பதற்கு முன்பே அதிகாலை 4 மணிக்கு வந்தும், தூய்மைப் பணி, குடிநீர், கழிப்பறை, மருத்துவ முகாம் பணிகளை ஆய்வு செய்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இது குறித்து மாநகராட்சி நகர் நல உதவி அலுவலர் அபிஷேக், கூறுகையில், “சித்திரைத் திருவிழா மாநகராட்சி தூய்மைப் பணி பொதுமக்கள், பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால், அதே பார்முலாவை பின்பற்றி திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 250 பேர் தவிர, வெளியூர்களில் இருந்து 150 சிறப்பு தற்காலிக பணியாளர்களையும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருவிழா நேரம் என்பதால் கிரிவலப் பாதைகளில் பக்தர்கள் வீசும் குப்பைகள், அன்னதானம் பகுதியில் சேரும் குப்பைகள், சாலை, வீதிகளில் சேரும் குப்பைகளை சேகரித்து உரக்கிடங்கிற்கு உடனக்குடன் கொண்டு செல்வதற்கு 36 இலகு ரக வாகனங்கள், 9 டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டன. வழக்கமாக திருப்பரங்குன்றம் பகுதியில் ஒரு நாளைக்கு 40 டன் குப்பைகள் மட்டுமே சேரும். ஆனால், நேற்று ஒரே நாளில் 250 டன் குப்பைகள் சேர்ந்தன.
தொடர்ந்து குப்பைகளை அள்ளிக் கொண்டிருக்கிறோம். இதுதவிர, பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டிடங்களுடன் கூடிய 15 நிரந்தர கழிப்பறைகள், 15 மொபைல் கழிப்பறைகள் வைக்கப்பட்டன. கழிப்பறைகளை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வதற்கு பணியாளர்கள் ஷிஃப்ட் முறையில் பணியமர்த்தப்பட்டனர். திருவிழாவுக்கு முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், குழந்தைகளும் வருவார்கள்.
அவர்களுக்கு அவசர முதலுதவி சிகிச்சை வழங்குவதற்குகாக, கோயிலுக்கு வெளியேள்ள பகுதிகளில் வெளியே 20 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்தது. மாநகராட்சி நகர் நல ஆரம்ப நிலைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள், ஆலோசனைகளை வழங்கினர்.
கும்பிஷேகம் நடந்த விமானத்திற்கு அருகே விஐபிகள் வருவார்கள் என்பதால் அவர்களுக்காக அருகேயும் ஒரு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு உள்ளே 2 ஆம்புலன்ஸ்கள், வெளியே 5 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. 50 இடங்களில் பக்தர்களுக்காக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன, இந்த தொட்டிகளில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குளோரினேஷன் செய்யப்பட்டது.
குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகளில் தண்ணீர் இருப்பை கண்காணித்து, சுகாதாரப் பணியாளர்கள் பொறியியல் பிரிவுக்கு தகவல் தெரிவித்து உடனுக்குடன் தண்ணீர் வரவழைக்கப்பட்டது. இன்று 15ம் தேதி மாலைக்குள் திருப்பரங்குன்றம் கோயில், மலையை சுற்றியுள்ள அனைத்து வகை குப்பைகளையும் அகற்றிவிடுவோம்” என்று அபிஷேக் கூறியுள்ளார்.