மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தின்போது தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தின்போது யாகசாலை, கருவறை, கோபுர விமான பூஜையில் தமிழில் மந்திரங்கள் ஓதுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழ் மொழியில் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் மனுக்களுடன் சேர்த்து ஜூலை 2-ம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தை மாற்றக்கோரி சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி, உயர் நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், கும்பாபிஷேக நேரத்தை முடிவு செய்யசபரிமலை மேல் சாந்தி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
இதையடுத்து, அந்தக் குழு கூடி, ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. இந்த நேரத்துக்கு, குழுவில் இடம் பெற்றிருந்த சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் மேல்சாந்தி குறித்த நேரமே இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கும்பாபிஷேக நேரத்தை மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் “ஜூலை 7-ம் தேதி பகல் 12.05 மணி முதல் 12.47 மணிதான் முகூர்த்த நேரம். தோஷங்கள் இல்லாத இந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடவேண்டும். அதுவரை கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கத் தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ். மதி, ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “நீதிமன்றம் அமைத்த குழு கும்பாபிஷேக நேரத்தை முடிவு செய்துள்ளது. அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்தலாம். கும்பாபிஷேகத்தைப் பொறுத்தவரை, கோயில் விதாயகர் குறிக்கும் நேரம்தான் முக்கியம். இனி வரும் காலங்களில் கோயில் விதாயகர் குறிப்பிடும் நேரத்தை எழுத்துப்பூர்வமாக பெற்று, அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்” என உத்தரவிட்டனர்.