மதுரை: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் திருப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆகம நிபுணர்கள் இடம் பெறவில்லை. கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கோயிலில் 24 புனித தீர்த்தங்களில் நாழிக்கிணறு என்ற தீர்த்தம் மட்டுமே இப்போது உள்ளது. தீர்த்தங்களின் பெயர்களை குறிப்பிட்டு கல் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தூண்கள் கோயில் திருப்பணிகளில் மறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் தூண்களை மீண்டும் நிறுவ வேண்டும். கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டரில் மலர் தூவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வருவதில்லை.
ஹெலிகாப்டரில் மலர் தூவும் சடங்கு மிகப் பழமையானது. இதற்கு கோயில் நிதி செலவிடப்படுவது தவறானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். எனவே, கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஆகம நிபுணர்கள் குழு அமைக்கவும், 24 தீர்த்த தூண்களை மீண்டும் அமைக்கவும், அதுவரை திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை தரப்பில், “கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை கண்காணிக்க நீதிமன்ற உத்தரவின் படி ஆகம நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில், “கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அல்லது புனித நீர் ஊற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது,” என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “நிம்மதி தேடி கோயிலுக்கு வரும் ஏழை பக்தர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை. முதலில் அதற்கு தீர்வு காண வேண்டும். திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விவகாரத்தில் ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தேவையெனில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு அளிக்கலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.