சென்னை: “திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முறையான அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், கோயில் கும்பாபிஷேகத்தை அனைத்து பகுதிகளிலும் காணும் வகையில் எல்இடி திரைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 6,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன. கும்பாபிஷேக விழா பணிகளுக்காக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோயில்களில் மருந்து சாத்திய பிறகுதான் கும்பாபிஷேகம் நடைபெறும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னரே மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுவது மரபாக உள்ளது. எனவே, மரபு மற்றும் கடந்த கும்பாபிஷேகங்களின் பழக்க வழக்கத்தின்படி கும்பாபிஷேகத்துக்கு முன்தினம் பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படுவதோடு, மறுநாள் காலையில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின், மருந்து சாத்தும் நிகழ்வு மாலை வரை நடைபெறும். அதற்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
கும்பாபிஷேக விழாவில் முறையான அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம். அவர்கள் வழங்கும் அன்னதானத்தை பரிசோதிப்பதற்கு அன்னதான பரிசோதனை குழு ஒன்றை அமைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்து முன்னணி எதிர்ப்பு: முன்னதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயில் திருவிழாக்கள் என்றாலும், கும்பாபிஷேக விழாக்கள் என்றாலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது நடைமுறை வழக்கம். பலர் தாமாகவே முன்வந்து அன்னதானம் செய்ய நினைக்கின்ற போது, மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் உரிய அனுமதி பெற்று வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்படி அனுமதி வாங்கி வந்த பிறகும் கூட திருச்செந்தூரில் அன்னதானம் செய்ய கடும் கட்டுப்பாடுகள் நிலவுகிறது. இதை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் கவனத்தில் கொண்டு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.