சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் விழாவில் பலர் தாமாக முன்வந்து அன்னதானம் வழங்குகின்றனர். இதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக நாளில் முருகனைத் தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான பேருந்து வசதி, குடிநீர், கழிப்பிடம் வசதி, பாதுகாப்பான தரிசனம், பேருந்து வசதி, பார்க்கிங் வசதி போன்ற அடிப்படை வசதிகளை அறநிலையத் துறை ஏற்படுத்தித் தர முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பல தரப்பினரும் வருகை தருவார்கள் என்பதால் சுவாமி தரிசனம் செய்யும் வரிசையில் முன்கூட்டியே திட்டமிட்டு நெரிசல் ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். பால்குடம், காவடி எடுத்து வரும் பக்தர்களுக்குச் சிறப்பு வழியை ஏற்படுத்தித் தர வேண்டும். கோயில் திருவிழாக்கள் என்றாலும், கும்பாபிஷேக விழாக்கள் என்றாலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது நடைமுறை வழக்கம்.
பலர் தாமாகவே முன்வந்து அன்னதானம் செய்ய நினைக்கின்ற போது, மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் உரிய அனுமதி பெற்று வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி அனுமதி வாங்கி வந்த பிறகும் கூட திருச்செந்தூரில் அன்னதானம் செய்ய கடும் கட்டுப்பாடுகள் நிலவுகிறது. இதை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் கவனத்தில் கொண்டு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது