திருநெல்வேலி: திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் பல ஆண்டுகளாக துப்பு துலங்காத நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையிலுள்ள தண்டனைக் கைதி ஒருவரிடம் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை நடத்தியுள்ளார்.
திமுகவின் முதன்மைச் செயலரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர், தொழிலதிபர் ராமஜெயம். கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி திருச்சியில் நடைபயிற்சியின்போது கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் விசாரித்தும் வழக்கில் துப்புதுலங்கவில்லை. குற்றவாளிகளும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதி சுடலைமுத்து என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தண்டனை கைதி சுடலைமுத்து, திருநெல்வேலி சிப்காட் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட காலக்கட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் தொழிற்பயிற்சிக்காக சுடலைமுத்து சென்றிருந்ததாக தெரிகிறது. அப்போது ராமஜெயம் கொலை தொடர்பாக மற்றொரு கைதியுடன் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த முக்கிய தகவலின்பேரில் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீஸார் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வந்து, தண்டனை கைதி சுடலைமுத்துவிடம் 3 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.