சென்னை: திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மண்டல சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தீவிர புயல் ‘சக்தி’ நிலவுகிறது. இது இன்று அரபிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (அக்.5) பெரும்பாலான இடங்களிலும், நாளை முதல் முதல் வரும் 10-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 12 செ.மீ., திண்டுக்கல்லில் 11 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை, செம்மேடு, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.