திருச்சி: புளியஞ்சோலை சுற்றுலா தளம் பகுதியில் கரடி உலா வருவதால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று காலை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நாமக்கல் மாவட்ட எல்லையில், கொல்லிமலை அடிவாரத்தில் புளியஞ்சோலை சூழல் சுற்றுலா தளம் இயங்கி வருகிறது. சுற்றுலா தளம் அமைந்துள்ள தரைப்பகுதி திருச்சி மாவட்ட எல்லையிலும், சுற்றுலா தளத்திற்கு மேல் மலைப்பகுதி நாமக்கல் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.-
புளியஞ்சோலை பகுதியில் கரடி உலா வருவதாக வந்த செய்தியை அடுத்து பொதுமக்கள் நலன் கருதியும், பாதுகாப்பு கருதியும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று நாமக்கல் மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர்கள் கூறியது: நேற்று மாலை 5 மணி அளவில் கரடி ஒன்று புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்ததை காண முடிந்தது. அந்த கரடி மலையின் மேல் பகுதிக்கு விரைவில் சென்று விடும் என எதிர்பார்க்கிறோம். கரடி மலை மீது சென்றவுடன் சுற்றுலா தளம் மீண்டும் திறக்கப்படும், என்றனர்.