திருச்சி: திருச்சி மாவட்டம் கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி, அங்கிருந்த விவசாயி சகாதேவனை(45) கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல, அன்று மாலை உத்தமர்சீலியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாய அணி முன்னாள் தலைவரான கணபதி(70) என்பவர் தனது வாழைத்தோப்புக்கு சென்றபோது, அங்கு வந்த காட்டுப்பன்றி அவரையும் கடித்துக்குதறியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர்இழந்தார். இதுகுறித்து நம்பர்-1 டோல்கேட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரங்கம் பகுதி செயலாளர் பி.தர்மா கூறும்போது, “காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. எனவே, காட்டுப்பன்றி தாக்கியதில் உயிரிழந்துள்ள கணபதி உடலை வாங்க மறுத்து நாளை (இன்று) காலை திருச்சி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.